
பீகார் மாநிலதில் உள்ள டானாபூரில் உள்ள மல்சலாமி பகுதியில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டரை வயது மகளை ரூ.40,000க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலையின்றி இருந்த அவர், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரின் உதவியுடன் குழந்தையை விற்றதாக தெரிகிறது. இதனை அறிந்த குழந்தையின் தாய், உடனடியாக போலீசில் புகார் அளித்ததையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தகவல் கிடைத்த உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது மகளை சரண் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரருக்கு விற்றது உறுதியாகியது. அதன்பின் போலீசார் அப்பகுதியில் தேடுதல் நடத்தி அந்த தம்பதியரையும் கைது செய்தனர்.
அதேபோல், இடைமுகமாக செயல்பட்ட செவிலியரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தந்தை அளித்துள்ள வாக்குமூலத்தின் படி, தனது மனைவி பெற்றோர் வீட்டில் இருந்தபோது, செவிலியரை அழைத்து, மகளை விற்பதைப்பற்றி பேசியதாக கூறியுள்ளார். “நான் வேலை இல்லாமல் பல மாதங்களாக இருந்தேன். வீட்டில் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் நிதி நெருக்கடியில் இருந்தேன். என் மகளுக்கு நன்றாக உணவு கூட கொடுக்க முடியவில்லை,” என்று மனவேதனையுடன் தெரிவித்தார். அதன்பிறகு, செவிலியர் வாயிலாக ஒரு ஜோடியிடம் ரூ.40,000க்கு குழந்தையை ஒப்படைத்தார் என்றும் கூறினார்.
இந்த சம்பவம் சமூகத்தில் வறுமை காரணமாக ஒரு தந்தை இவ்வளவு மோசமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வருவதாக இருக்கும்போது, அவருக்கு உதவியாக இருக்க வேண்டிய சமூக நலத் திட்டங்கள் எங்கே? குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் எவ்வளவு விளங்கச்செய்யப்படுகின்றன? போன்ற கேள்விகள் எழுகின்றன. போலீசார் 3 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சிறுமிக்கு அனைத்து சட்ட ரீதியான பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.