
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் அசோக்- வாணி. இவர்களது மகள் ஸ்ருதிஹா (4). கடந்த மே 26 ஆம் தேதி காலை ஸ்ருதிஹாவை விளையாடிக் கொண்டிருக்கும்போது நாய் கடித்துள்ளது. இதனால் தம்பதியினர் இருவரும் குழந்தையை பைக்கில் மாண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது மாண்டியா நகர் நந்தா சர்க்கிள் போக்குவரத்து காவல் துறையினர் அசோக்கை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்ததால் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். ஆனால் அசோக் தனது மகளுக்கு சிகிச்சைக்காக அவசரமாக செல்ல வேண்டியுள்ளது எனக் கூறி பைக்கில் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது போக்குவரத்து அதிகாரி செல்லவிடாமல் பைக்கை இழுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் பைக் நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அசோக், வாணி எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். ஆனால் குழந்தை தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்களுடைய மகள் கண்முன்னே உயிரிழந்ததை கண்ட தம்பதியினர் இருவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த மாண்டியா சூப்பிரண்ட் சம்பவத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போக்குவரத்துக் காவல் துறை சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மகளை பறிகொடுத்த தந்தை அசோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எனது மகளை நாய் கடித்ததால் சிகிச்சைக்காக அழைத்து வரும்போது காவல்துறையினரின் தகாத நடைமுறையால் விபத்துள்ளாகியது. எனது மகளை பறிகொடுத்து விட்டேன். எனக்கு இழப்பீடு வேண்டாம். நான் ரூபாய் 10 லட்சம் கொடுக்கிறேன். எனது மகளைத் திரும்ப கொடுத்து விடுங்கள்” என கண்ணீர் விட்டபடி கூறினார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.