இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முக்கிய திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தனிநாட்டு திறனை வலுப்படுத்தும் வகையில், இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமானங்கள், விமான மேம்பாட்டு நிறுவனத்தின் (ADA) தலைமையில் உருவாக்கப்படும். தனியார் நிறுவனங்கள், தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ இந்த திட்டத்தின் ஏலத்தில் பங்கேற்கலாம். இருப்பினும், பங்கேற்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் சட்ட விதிமுறைகளுக்குட்பட்ட, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான நிபந்தனை.

இந்த திட்டம் தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) விளக்கம் அளித்துள்ளது. அதன் தலைவர் சமீர் வி காமத் கூறுகையில், “2024ஆம் ஆண்டில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5ம் தலைமுறை விமானங்கள் 2035க்குள் இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பாக 4ம் தலைமுறை ‘காவேரி’ இன்ஜின் திட்டத்தில் நிறைய அனுபவங்களை பெற்றோம். தற்போது எங்கள் அடுத்த இலக்கு 5-ம் தலைமுறை இன்ஜின் உருவாக்கம் தான்” என்றார். இந்த அறிவிப்பு, இந்தியாவின் தானியங்கி பாதுகாப்பு முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.