
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீவேஷ்(25) என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய்க்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரயில் பரனூர் அருகே சென்ற போது சில மர்ம நபர்கள் தீவேஷின் செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தீவேஷ் அவர்களிடம் செல்போனை கொடுக்காமல் போராடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீவேஷ் ரயிலில் இருந்து தவறி விழுந்து தலை மற்றும் முதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டு வலியில் அலறி துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீவேஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.