
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மாயகஞ்ச் அரசு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு சாலை விபத்தில் காயமடைந்த ரவிகுமார் மிஸ்ரா என்பவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்து ஊசி போட வேண்டிய நிலையில், நர்ஸ் ஒருவர் தவறாக இன்சுலின் மருந்தை வயிற்றில் செலுத்தினார். ரவி, “வலி நிவாரணி தானே போடணும், ஏன் வயிற்றில் ஊசி?” எனக் கேட்டபோது, “மருத்துவர் அப்படிதான் சொல்லியிருக்கிறார்” என நர்ஸ் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்த அலட்சியத்தின் விளைவாக, ரவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரது இரத்தச் சர்க்கரை அளவு 187 ஆக உயர்ந்தது. பதட்டமடைந்த ரவி, தன் குடும்பத்தினருக்கு போன் செய்து இந்த விஷயத்தை தெரிவித்தார். பின்னர், அவசரமாக ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டு, அவரை பரிசோதித்ததில் உடல் நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இன்சுலின் மருந்து தேவையில்லாமல் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட உளவியல் பதட்டம் மிகுந்தது. பின்னர் நர்ஸ் வந்து, மூன்று நான்கு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஊசி போடவேண்டிய அழுத்தம் காரணமாக தவறு நடந்ததாகவும், தன்னை மன்னிக்கும்படி கேட்டு மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரவியின் குடும்பத்தினர் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை. ரவிகுமார் மிஸ்ராவுக்கு விரைவில் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது. இது பற்றி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது, இன்சுலின் தேவையில்லாமல் செலுத்தப்பட்டால், சில நேரங்களில் நோயாளியின் சர்க்கரை அளவு திடீரென குறைந்து, 6 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். மேலும் “மருத்துவ அலட்சியங்கள் இப்போது பொதுவானதாகிவிட்டாலும், இவை தீவிரமாக விசாரணை செய்யப்பட வேண்டும்” என மருத்துவக் கல்வித் துறை தலைவர் டாக்டர் ராஜ்கமல் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.