சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களோடு உயிர்த்தப்பினர்.

கல்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(23). பால்வண்டி ஓட்டுநரான இவர் கார் விபத்து ஏற்பட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தை பார்க்க சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் ஒன்று லோகேஷ் மீது மோதியது.

இந்த விபத்தில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோகேஷ் உறவினர்கள் டூரிஸ்ட் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.