ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரத்தின் செக்டார் 81 பகுதியில் அமைந்துள்ள பூரி ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது 8 முதல் 10 பேர் கொண்ட ஆண்கள் குழு கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆண்கள் சிலர் பெண்களை குத்தி, உதைத்து, தரையில் வீசுவதைப் போல் காணப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற பெண்கள் மீதும் தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது. டிகா பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ஸ்பாவிற்கு வந்து மசாஜ் சேவையைப் பற்றி கேட்டபோது, அதில் ஒருவர் குடிபோதையில் இருந்ததாகவும், வரவேற்பறையில் இருந்த பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் ஸ்பா உரிமையாளர் மம்தா ராஜ்புத் கூறியுள்ளார். அவரை வெளியேறுமாறு கூறியபோது திட்டியதால், பின்னர் அந்த நபர் தனது நண்பர்கள் குழுவுடன் திரும்பி வந்து தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு பெண் ஊழியர் கம்பை எடுத்த போது, அந்த குழுவினர் அனைவரும் அவள்மீது மற்றும் காப்பாற்ற வந்த மற்ற பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடியோவில், ஒரு பெண் தரையில் விழுந்த நிலையில் மீண்டும் மீண்டும் உதைக்கப்படுவதும், கொடுமையாக தகப்படுவதும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து BPTP காவல் நிலைய பொறுப்பாளர் அரவிந்த் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தரப்பும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறினார். மேலும்  வீடியோவை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.