உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தலைநகர் லக்னோவின் மாலிஹாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் தனது 70 வயதான பாட்டியை கழுத்து நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

அந்த கொலை கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்ததாகவும், பாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையை வைத்துத் திணறடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் பேரன், கொலை செய்த பிறகு அதே அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பது போல நடித்து, மறுநாள் காலையில் எதுவும் நடக்காதது போல் பள்ளிக்குச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை இழந்த மூதாட்டி, மருமகள் வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரே பேரனை வளர்த்து வந்தார். அந்த சிறுவன் தற்போது தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று, பள்ளிக்கட்டணத்துக்காக பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பாட்டி “நீ என்னோட தங்கணும், அப்ப தான் பணம் தருவேன்” என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த சிறுவன், தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை கொலை   செய்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார்  தகவல்களை பெற்று உள்ளனர்.

மேலும், கடந்த வியாழக்கிழமை காலை, பாட்டியின் மகள் தனது தாயை பலமுறை அழைத்தும் பதில் வராததால், சந்தேகமடைந்தார். பக்கத்து வீட்டுக்காரரை அனுப்பி பார்த்தபோது, மூதாட்டி மயக்க நிலையில் கிடந்ததைப் பார்த்த அவர், உடனே வீட்டுக்கு வந்து தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் டாக்டர்கள், மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதனையடுத்து தடயவியல் குழு நடத்திய சோதனையில் உண்மை கண்டுபிடிக்கபட்டது.

பிறகு சிறுவன் பள்ளியிலிருந்து திரும்பியதும் கைது செய்யபட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் சிறார்களுக்கு அமல்படுத்தப்படும் குற்றவியல் சட்டங்களின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.