உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ரி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, சண்டை காரணமாக துக்க நிகழ்ச்சியாக மாறியது. சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது, டிஜே இசைக்கு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற விருந்தாளர் ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி கொன்றுள்ளது.

ஹைதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் விஷ்வகர்மா, பூல்சந்த் விஷ்வகர்மாவின் மகளின் திருமணத்திற்கு விருந்தாளியாக வந்திருந்தார். விழாவில் டிஜே இசை ஒலிக்க, அதில் சிலர் ஆவேசமாக நடனமாடியதைத் தொடர்ந்து வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது ரஞ்சித் பிரச்சினை வேண்டாம், ஒதுங்கி போங்க என ஆவேசமாக வலியுறுத்தினார். இதனை  தவறாக எண்ணிய மணமகள் தரப்பினர் மற்றும் அவர்களின் உறவினர்கள், ஆத்திரமடைந்து ரஞ்சித்தை அடித்து தாக்கினர்.

காயமடைந்த ரஞ்சித் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப் பதிந்து கபூர் சந்த், அஷோக் விஷ்வகர்மா, ரஜன் விஷ்வகர்மா மற்றும் லக்கி விஷ்வகர்மா ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.