
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்க துறையின் நடவடிக்கைகள் சட்ட மீறலானவை என்பதை உச்சநீதிமன்ற கருத்துக்கள் மூலம் அரசு உறுதி செய்துள்ளது. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். எத்தனை முறை விளக்கம் அளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்க புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவை திமுகவினரை குறி வைத்தது போல இந்தியாவில் வேறு எந்த கட்சியையும் குறி வைத்ததில்லை. அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம் தான் வென்று வருகிறோமே தவிர அதிமுகவை போல அடிமை சாசனம் எழுதி கொடுத்ததில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.