ஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிகின்றனர்.

அதன்படி வாகனங்களில் மதத்தைக் குறிக்கும் வகையில் ஸ்டிக்கர்கள், பெயர்கள் காணப்பட்டால் அவை திருமலைக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில் திருமலையில் உள்ள “கல்யாண வேதிகா” மண்டபத்தில் தலையில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் “எனக்கு தொழுகை செய்ய வேண்டும், அதற்கான இடம் எங்கு இருக்கிறது?” என கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கேட்டார்.

அப்போது அனைவரும் அமைதியாக சென்றதால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்த அவர் 10 நிமிடங்கள் தொடர்ந்து தொழுகை செய்தார். அதன்பின் தமிழக பதிவு எண் கொண்ட காரில் சென்று அமர்ந்தார். அப்போது பக்தர் ஒருவர் “இங்கு தொழுகை செய்ய தடையிருக்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்டதற்கு “அது பற்றி எனக்கு தெரியாது” என கூறினார்.

அந்த நபர் செய்த அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு காவல்துறையினர் தொழுகை செய்த நபரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் தடை செய்யப்பட்ட இடத்தில் அவர் தொழுதையை செய்தது ஏன்? எங்கிருந்து வந்தார்? எதற்காக வந்தார்? என்று பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.