ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் சைனா என்ற 23 வயது பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததாலும் காசநோய் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் ரத்தம் ஏற்றியுள்ளனர். இவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இவரது இரத்த வகை ஏ பாசிட்டிவ் எனக் அறிக்கையில் இருந்ததால் அவருக்கு டாக்டர் பரிந்துரையின் படி ஏ வகை ரத்தத்தை ஏற்றியுள்ளனர்.

அதன் பிறகு சைனாவுக்கு திடீரென கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு குளிர் காய்ச்சல் ரத்த கசிவு போன்றவைகள் ஏற்பட்ட நிலையில் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் மீண்டும் பரிசோதனை செய்தபோது அவரது ரத்த வகை பி பாசிடிவ் பிரிவு என்று தெரியவந்தது. பின்னர் டாக்டர்கள் மீண்டும் பரிசோதனை நடத்தியதில் பி-பாசிட்டிவ் ரத்தம் உள்ள ஒருவருக்கு ஏ வகை ரத்தத்தை ஏற்றியதால் தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையில் சைனாவின் உடல்நிலை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டதால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. மேலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் உறவினர்கள் கர்ப்பிணி பெண் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை.