
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் மீது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் அக்கல்லூரி முதல்வர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
அந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டுள்ளது அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரை கல்லூரி முதல்வர் தகாத முறையில் தொடுவதற்கும் முயற்சி செய்தது போன்ற காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்லூரி துறையிடம் உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குனர் அக்ஷய் சூட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுந்தர் நகர் பொறியியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார். அந்த புகார் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகாரில் பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் முதல்வர் முன்பு தங்கள் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.
அப்போது தன்னிடமும் சக மாணவிகள் இடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்தும் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.