ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்றிரவு (22 மே 2025) விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் காரணமாக, அதே நேரத்தில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருந்த கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், வானில் சிறிது நேரம் வட்டமடித்து பின் பத்திரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில், இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்த தாக்குதலை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் நோக்கில், மத்திய அரசு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு எம்.பி குழுவை அமைத்து, வெளிநாட்டு பயணத்திற்குப் புறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி உள்ளிட்ட குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர். மாஸ்கோ விமான நிலையத்தில் இரவு நேரத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால், அனைத்து விமானங்களும் சற்று நேரம் தாமதமாகச் தரையிறங்கியது.

இதில், கனிமொழி பயணித்த விமானமும் தரையிறங்க முடியாமல், வானில் சுழன்று, பின்னர் பத்திரமாக தரை இறங்கியது. அதன்பின், குழுவினர் மாஸ்கோவிலுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று தங்கினர்.

இன்று (மே 23), ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன், கனிமொழி தலைமையிலான குழு ஆலோசனை நடத்தவுள்ளது. தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த குழு தொடர்புகளுக்காக பயணம் மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.