
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு திருமணம் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அந்த மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினரான மகீன்-மோக்சின் காஷி தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த மண்டபத்தின் அருகே ஒரு இந்து தம்பதியினரான சமஸ்கிருதி கவாடே பாட்டீல்-நரேந்திர காலாண்ட பாட்டீல் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6:00 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.
திறந்தவெளி என்பதால் நிற்கக்கூட இடம் இல்லாமல் உறவினர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். அப்போது அருகில் ஒரு திருமண மண்டபம் இருந்தது இந்து தம்பதியினருக்கு தெரிய வந்ததால் உடனடியாக அவர்களும் அவர்களது உறவினர்களும் அங்கு சென்றனர். ஆனால் அப்போது இஸ்லாமிய தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால் மழை நிற்காததால் இந்து குடும்பத்தினர் இஸ்லாமிய குடும்பத்தினரிடம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அங்கு நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். பின்னர் இரு வரவேற்பு நிகழ்ச்சியும் ஒரே மேடையில் நடந்த நிலையில் இரு மணமக்களும் ஒரே மேடையில் நின்றனர்.
மேலும் இரு குடும்பத்தின் உறவினர்களும் ஒன்றாக விருந்திலும் கலந்து கொண்டதோடு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.