
Google I/O 2025 மாநாட்டில், Google நிறுவனத்தின் முக்கிய செயலியான Google Meet வீடியோ அழைப்பு செயலியில் நேரடி குரல் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், இரு மொழிகளைப் பேசும் பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் வகையில் உரையாட முடியும்.
Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மேடையில் நிகழ்த்திய டெமோவில், இந்த வசதி வழக்கமான காப்ஷன் மொழிபெயர்ப்பை விட மேம்பட்டதாக, பேச்சாளரின் குரல், முகபாவனை மற்றும் பேசும் பாணியுடன் மொழிபெயர்ப்பு நடைபெறும் என விளக்கினார்.
இந்த வசதி, Gemini AI மூலம் இயக்கப்படுகிறது. இதில் குறைந்த தாமதத்துடன் குரல் புரிதலும், மொழிபெயர்ப்பு மற்றும் அதே பேச்சாளர் பேசியது போலவே புதிய குரல் உருவாக்கமும் இடம்பெறுகிறது.
இதில், மெஷின் குரல் போல இல்லாமல், மொழிபெயர்க்கப்பட்ட குரல் உண்மையான பேச்சாளர் பேசியது போலவே இருப்பது, பயனர்களுக்கு இயற்கையான மற்றும் நம்பத்தகுந்த அனுபவத்தை வழங்குகிறது. டெமோவின் போது, ஒரு பயனர் ஆங்கிலத்தில் பேசிய போது, மற்றொரு பயனர் ஸ்பானிஷ் மொழியில் கேட்பது போல மொழிபெயர்ப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த வசதி தற்போது Google AI Pro மற்றும் Ultra பிளான் பயனர்களுக்கான பீட்டா பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கிடையே ஆதரவு அளிக்கப்படுகிறது. மேலும் சில வாரங்களில் மேலும் பல மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சந்தையிலும் இதனை கொண்டு செல்லும் நோக்கத்தில், Workspace நிறுவன பயனாளர்களுக்கான எண்டர்பிரைஸ் பதிப்பு உருவாக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் சோதனை இயக்கம் நடத்தப்படவுள்ளதாகவும் Google தெரிவித்துள்ளது. Gmail-இல் கூடுதலாக, AI அடிப்படையிலான தனிப்பட்ட பதில்கள் வழங்கும் smart reply வசதி அறிமுகமாகியுள்ளது