சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய உணவை எளிமையுடன், அன்போடும் செய்து விடும் போது, அது நம் பாரம்பரியத்தின் அழகையும், உறவின் உண்மையையும் உலகிற்கு காட்டுகிறது. இதையே உறுதி செய்துள்ளார் வேல்ஸைச் சேர்ந்த ஒருவர், தனது இந்திய மனைவிக்காக தமிழர்களின் பாரம்பரியமான இட்லி, தக்காளி சட்னி, சாம்பார், மேலும் மசாலா சாய் வரை செய்து கொடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ, @indian_girl_and_welsh_man எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அவர் முதலில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்குகிறார். பிறகு, இட்லி தட்டுகளை நன்கு எண்ணெய் தடவி, இட்லி மாவை அதில் ஊற்றி, இட்லி மேக்கரில் வைத்து வேகவைக்கிறார். அந்த இடையே, சட்னிக்காக வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் போட்டு, அதில் வேர்கடலை சேர்த்து அரைக்கிறார். அதனைச் கடுகு, பூண்டு, மஞ்சள்தூள், கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தாளிக்கிறார்.

அதன்பின், மசாலா சாய் தயாரிப்பும் தொடங்குகிறார். சூடான தண்ணீரில் டீ பேக், பிசைந்த இஞ்சி, பாலை சேர்த்து சாயை அருமையாகச் செய்கிறார். இட்லி வெந்து முடிந்ததும், சட்னி, சாம்பார் உடன் பரிமாறுகிறார். வீடியோ முடிவில், அவர் தனது மனைவிக்குச் சூடான சாயுடன் இட்லி தட்டையும் கொடுக்கிறார். மனைவி சாப்பிட்டபோது மகிழ்ச்சியாக பிரதிசெயலளிக்கிறார். “அவருடைய அன்பு உண்மையிலேயே உணவில் தெரிகிறது,” என நெட்டிசன்கள் பளிச்சென கருத்துக்களைப் பதிவிட்டு, இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.