கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வே நிர்வாகம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், எச்சில் துப்பும் செயல்களில் ஈடுபட்ட 31,576 பேரிடம் ரூ. 32,31,740 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பி அசுத்தம் ஏற்படுத்தியவர்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பதன் மூலம், நீண்டகால சுகாதார மாற்றத்தை ஏற்படுத்துவதே முக்கிய இலக்காக இருக்கிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக, சுகாதாரத்துறையினரும், ரயில்வே ஊழியர்களும் இணைந்து, பயணிகளுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இது மாதிரியான நடவடிக்கைகள், பொதுமக்கள் சுத்தம் குறித்த தங்களது பொறுப்பை உணர்த்துவதோடு, ரயில்வே சேவைகளின் தரத்தையும், பயண அனுபவத்தையும் உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.