பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் கடந்த  மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான ‘க்ருத்ரிம்’-இல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். இவரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அலுவலகத்தில் நிலவிய நச்சுத்தன்மை மற்றும் மேலாளர் ராஜ்கிரண் பானுகந்தியின் கடுமையான நடவடிக்கையால்  நிகிலின் தற்கொலைக்கு காரணம் என நிறுவன ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஊழியர்கள் சிலர், பானுகந்தி, புதிய ஊழியர்களிடம் அடிக்கடி வேலை சார்ந்த அழுத்தங்களை கொடுத்து, இழிவாக பேசுவதாகவும், இதனால் பலர் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிரிழந்த நிகில் கடந்த ஏப்ரல் 8 அன்று உடல் நலக் காரணமாக விடுப்பு கேட்டிருந்ததுடன், பின்னர் உடல்நிலை மோசமடைந்து மீண்டும் விடுப்பு நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிகிலின் மரணத்துக்குப் பிறகும், அந்த மேலாளர் மற்ற ஊழியர்களிடம் தொடர்ந்தும் மோசமாக நடந்துகொண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

முன்னாள் ஊழியர் ஒருவர், அந்த மேலாளரின் பழிவாங்கும் பணிநடத்தை காரணமாகவே தாம் தற்கொலைக்குத் துணிந்த நிலைக்குப் போனதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது காவல்துறையினரின் விசாரணையும், மருத்துவ பரிசோதனையும் இந்த வழக்கில் முக்கிய அம்சங்களாக செயல்பட்டு வருகின்றன. இச்சம்பவம்  வேலைநிறுவனங்களில் மனநலப் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.