
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்தர் என்றவர், கடந்த சில ஆண்டுகளாக தேநீர் கடை மற்றும் தாபாவை நடத்தி வருகிறார். இவரிடம் பிந்து, ஜவஹர் மற்றும் அமர்ஜீத் ஆகியோர் தொடர்ந்து தேநீர், சிற்றுண்டிகள் வாங்கி ஆயிரக்கணக்கில் கடன் வைத்துள்ளனர். பிந்துவிடம் ரூ.10,000, ஜவஹரிடம் ரூ.4,000, அமர்ஜீத்திடம் ரூ.1,000 என மொத்தம் ரூ.15,000 கடன் வாங்கியுள்ளனர்.
பலமுறை கேட்டும் பணம் திருப்பி தரப்படாத நிலையில், அந்த நபர்கள் பணம் தர மறுப்பதோடு, தன்னை மிரட்டியதாக ராம் சந்தர் கூறுகிறார். 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கடனை வசூலிக்க முடியாததால், அவர் ஒரு ஓவியரிடம் உதவி கேட்டு, தனது கடையின் சுவரில் கடன் திருப்பித் தராத நபர்களின் பெயர்களையும், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையையும் எழுத வைத்தார். இந்த பட்டியல் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்களிடையே அவமானம் ஏற்படும் என்ற எண்ணத்தில், பெயர் வெளியானவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ராம் சந்தர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்தார். தற்போது அவர் கிராம மக்களிடம் உதவி கோரி, தனது கடனை வசூலிக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.