மதுரை மாவட்டம் திருமங்களம் பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பணம் பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் மாரிசாமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. பின்னர் மாரிசாமி தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். அப்போது மணிகண்டனின் சகோதரர் உதயகுமார் என்பவர் இருவருக்கும் இடையே நடந்த சண்டையை தீர்த்து வைப்பதற்காக சென்ற போது மாரிசாமி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

அப்போது உதயகுமார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மேலும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் என்ற சிறுவனின் தோள்பட்டையிலும் துப்பாக்கி குண்டு உரசியதால் காயம் ஏற்பட்டது. அந்த சமயம் அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.