திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதி உணவகத்தில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை பரிமாறப்பட்டன. அதனை சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியது.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகளில் யாரும் தீவிர நிலையில் இல்லை என்றும், பலர் சிகிச்சை தேவையில்லாமல் ஓய்வெடுத்து குணமடைந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் இந்த சம்பவம், மாணவிகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒப்பந்ததாரர் இந்த உணவகத்தை இயக்கி வருவதால், அவர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விடுதியில் உணவுப் பொருட்கள் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்காலிகமாக உணவகத்தில் உணவு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உணவு தரம் மற்றும் சுகாதார கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், உணவக ஒப்பந்ததாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.