
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹிசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தானிய “கையாளுபவர்” ஒருவருக்காக இந்தியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து வந்ததை ஜோதி ஒப்புக்கொண்டார்.
இவரது பயணச் செலவுகள் முழுவதும் பாகிஸ்தான் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, பாகிஸ்தானிலும் சீனாவிலும் VIP வசதிகளுடன் அவர் வரவேற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானில் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டு, VIP அனுமதியுடன் நாட்டைச் சுற்றியதாகவும், அங்கு பல உயர்மட்ட விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான், சீனா, துபாய், நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அதே நேரத்தில், ஹரியானா மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தந்தையுடன் ஹிசாரில் வாழும் ஜோதி, தனது செலவுகளை யூடியூப் வருமானம் மூலமாகவோ, குடும்பத்திடமிருந்தோ பெறவில்லை என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானின் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஜோதி மல்ஹோத்ரா தனது ‘Travel with Jo’ என்ற யூடியூப் சேனலில் உலக நாடுகளில் பயணங்கள், உணவு, கலாச்சாரம் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.
அவருக்கு யூடியூபில் 3.77 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் 1.31 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவரது வீடியோக்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, அவரது பாஸ்போர்ட், வங்கிக் கணக்குகள், பயண விவரங்கள் உள்ளிட்டவை தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், சமூக ஊடகங்களை வழியாக உளவுத் தரவுகள் வெளியிடும் அபாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.