தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் தற்போது ஆடு மாடுகளோடு இருக்கும் நிலையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்கிறேன். இது உலகம் சுற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. கட்சிப் பணிகளையும் அவ்வப்போது செய்து வருகிறேன். நான் தேவையில்லாத வேலையை பார்ப்பதற்கு பதிலாக என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

தற்போது புத்தகங்கள் படிப்பதோடு என் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்கிறேன். என் தாய் தந்தையோடு சாப்பிடுகிறேன். வாழ்க்கையில் தற்போது மிகவும் நிம்மதியாக இருக்கும் நிலையில் இதிலேயே பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதுமே ஒரு தொண்டராக பிரதமர் மோடிக்கு பணி செய்வதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

இதனை தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், ஆடு மேய்த்தவரை ஐபிஎஸ் ஆக்கியது திராவிடம். ஐபிஎஸ்-ஐ மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பிஜேபி ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் பாஜக கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். மேலும் இதனை குறிப்பிட்டு தான் அமைச்சர் மனோதங்கராஜ் இவ்வாறாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.