இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கடந்த வாரம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2004ஆம் ஆண்டில் அவர் பெற்ற பத்தாம் வகுப்பு CBSE மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகிறது. முதலில் 2023-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஜிதின் யாதவ் பகிர்ந்த இந்த மதிப்பெண் பட்டியலில், கோலி 600-ல் 419 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. ஆங்கிலத்தில் 83, சமூக அறிவியலில் 81, ஹிந்தியில் 75 என்ற நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், கணிதத்தில் 51, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 55, மற்றும் ஆரம்ப கணினி பாடத்தில் 74 என்ற சராசரி மதிப்பெண்கள் தான் இருந்தன.

 

இந்த மதிப்பெண்களை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, “மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாக இருந்திருந்தால், இன்று இந்தியா அவரை பின்தொடர்ந்து கொண்டிருக்காது. உண்மையான வெற்றி என்பது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பில் தான் உள்ளது,” என பதிவிட்டார். இந்த கருத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு சமூக ஊடக பயனர், “விராட் கோலியின் வெற்றி அவரது அர்ப்பணிப்பு மற்றும் மனோபாவத்தின் விளைவு” எனத் தெரிவித்தார். மற்றொருவர், “வெற்றி என்பது அறிவியல் மற்றும் கணிதத்தைத் தாண்டியது” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவும் மிகவும் வைரலாகி வரும் நிலையில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரத்தில் ஐபிஎல் தொடர்களில் விராட் கோலி விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.