கடலூர் மாவட்டம் கீழரதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் பாக்கியலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு பாக்கியலட்சுமி திருவாரூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதி கேட்டனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் உடல்நலம் மோசமாகி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டதால் தான் பாக்கியலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வெளியே சென்றதால் தான் காலதாமதம் ஏற்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தனர். மேலும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தையின் போது அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிவாரணம் வழங்கி, அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.