தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரர்களான ஹரிஹரனும், செந்தில் நாதனும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 457 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். ஒரே மதிப்பெண் எடுத்த அண்ணன் தம்பியை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து சகோதரர்கள் கூறியதாவது, நாங்கள் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தோம். 450 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஒரே மதிப்பெண் வந்திருப்பது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது என கூறியுள்ளனர்.