மும்பையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான மருத்துவச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான சிவகுமார் என்பவர், திடீரென கண்களில் எரிச்சல் மற்றும் குத்துவது போல் வலியினை உணர்ந்ததால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஒரு அபூர்வமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். அவரது இடது கண்ணில் இருந்து சுமார் 10 செ.மீ நீளமுள்ள புழு ஒன்று அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிவகுமார் முதலில் கண்களில் வலி, எரிச்சல், பின்னர் ரத்தக்கசிவை அனுபவித்ததாக கூறினார். இது ஒரு சாதாரண கண் தொற்றாக இருக்கலாம் என கருதிய அவர், சொட்டு மருந்துகள் பயன்படுத்தியபோதும் வலி குறையாத நிலையில், உள்ளூர் மருத்துவரை அணுகினார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், கண்ணுக்குள் நுழைந்திருந்த புழுவை கண்டறிந்த மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு மணி நேரம் நீண்ட அறுவைச் சிகிச்சையின் மூலம் புழு அகற்றப்பட்டது.

இது பற்றி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது, இந்தப் புழு கண்ணை கடந்தும உடலின் மற்ற முக்கிய உறுப்புகளை சென்றடைந்திருந்தால், அது இதயத்தையும், மூளையையும் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறினர். இது மிகவும் அபூர்வமான மற்றும் கடுமையான மருத்துவக் கேஸ் என்பதால், சவாலாகக் கையாளப்பட்டது. தற்போது சிவகுமாரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவருக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வீடு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம், சிறிய அறிகுறிகளையும் அவமதிக்கக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.