கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எல்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு பெற்று தருவதாக whatsapp மூலம்  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. மேலும் கொடுக்கப்படும் வேலையை முழுமையாக முடித்துக் கொடுத்தால் அவரவர் வங்கிக் கணக்கில் சம்பளம் தொகை வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அதனை நம்பிய இளைஞர் whatsapp-யில் கொடுக்கப்பட்ட லிங்கை ஓபன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார். பின்னர் அவருக்கு வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதற்கு ஆன்லைன் மூலம் வேலை வழங்கப்பட்டது. அதன் பின் அந்த இளைஞரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் இதுவரை நீங்கள் வேலை செய்ததற்காக ரூபாய் 10.80 லட்சம் சம்பளம் தங்களிடம் இருப்பதாகவும், அதனைப் பெறுவதற்கு முதலில் ரூபாய் 5 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் முழு பணத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார்.

அதனால் அந்த இளைஞர் ரூபாய் 5 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் ரூபாய் 3 லட்சம் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், வீட்டிலிருந்தபடியே வேலைவாய்ப்பு தருவதாக கூறி பலரின் வங்கி கணக்குகள், ஏடிஎம் கார்டு விவரங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் உள்ள பண விவரங்களை கண்டறிந்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி இதுபோன்ற கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதேபோன்று அந்த கும்பல் பெங்களூருவில் உள்ள 100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, மும்பையை சேர்ந்த ஒருவரையும் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஒருவரையும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட 12 பேரிடம் இருந்தும் 400 சிம் கார்டுகள், 140 ஏடிஎம் கார்டுகள், 17 காசோலை புத்தகங்கள், 27 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.