அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான அட்ரியானா ஸ்மித் என்ற பெண், 9ஆம் வார கர்ப்பமாக இருந்தபோது திடீரென கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்  மருத்துவமனையை அணுகியவர்க்கு, சோதனைகள் எதுவும் செய்யப்படாமல் சில மருந்துகள் கொடுத்து அனுப்பப்பட்டதாக அவரது தாய் ஏப்ரில் நியூக்கிர்க் புகார் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள் காலை, ஸ்மித்தின் காதலன் அவரை மூச்சுத்திணறலுடன், சிரமமாக உறங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, பின்னர் CT ஸ்கேன் மூலம் பலமான இரத்தக் கட்டிகள் மூளையில் காணப்பட்டது தெரிய வந்தது.

அதன்பின் அவசர அறுவை சிகிச்சைக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதற்குள் அவர் மூளைச்சாவு அடைந்தார். தற்போது அவர் 90 நாட்களுக்கும் மேலாக இயந்திர மூச்சுத்திணிப்பு சாதனத்தின் மூலம் உயிர் நிலை பேணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது, ஜார்ஜியாவில் 6 வார கர்ப்பங்களுக்கு பிறகு கருக்கலைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஸ்மித் மூளைச்சாவு அடைந்த பிறகும் கருவில் உள்ள குழந்தையை பாதுகாப்பதற்காக உயிருடன் வைத்திருக்கும் கட்டாயத்தில் உள்ளார். மேலும் லைப் சட்டத்தின் கீழ் குழந்தையை கலைக்கும் உரிமை வழங்க முடியாது என மருத்துவர்கள் ஸ்மித்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், அவரது தாய் நியூக்கிர்க், “என் மகள் மூச்சுவிடுகிறாள் போல் தெரிகிறாள், ஆனால் உண்மையில் அவர் இல்லை. அவருடைய மகன் இன்னும் அம்மா தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறார். இது நமக்குப் பொறுக்க முடியாத வேதனை. அவருடைய கருப்பையில் உள்ள குழந்தைக்கு பார்வையிழப்பு அல்லது பிற உடல் குறைகள் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் தீர்மானம் எங்களிடம் இருக்க வேண்டிய நேரத்தில் சட்டம் அதை மறுக்கிறது” என தெரிவித்தார்.

மருத்துவர்கள் 32 வாரம் வரை கர்ப்பத்தை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது இன்னும் 11 வாரங்கள் வரை ஸ்மித்தை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் பின் குழந்தைக்கு கருப்பைக்கு வெளியே வாழும் திறன் பெற்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் “ஒவ்வொரு நாளும் செல்ல செல்ல அதிக செலவு, அதிக கேள்விகள் எழுகின்றன. இது போன்ற சமயங்களில் உயிரிழந்தவர்களின் துணைவர் அல்லது குடும்பத்தினர் அவர்களது உரிமையை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். தற்போது கருவில் உள்ள குழந்தை எப்படி அதன் வாழ்க்கையை வாழும் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தையை வளர்ப்பதும் நாங்களே” என தனது வருத்தத்தை ஸ்மித்தின் தாய் நியூக்கிர்க் வெளிப்படுத்தி உள்ளார்.