பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டியை வருகிற 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தது.

 

13 லீக் ஆட்டங்கள் மற்றும்  இறுதிப்போட்டி உட்பட 4 பிளே ஆப் சுற்றி என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. புதிய அட்டவணையின் படி 2 நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. மே 29ஆம் தேதி இறுதி போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30ஆம் தேதி வெளியேறுதல் சுற்றும், ஜூன் 1-ம் தேதி இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டதால் நாடு திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் அவர்களது அணியில் இணைய உள்ளனர். இந்நிலையில் சென்னை வீரர் டேவால்ட் பிரேவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சென்னை அணி அடுத்த போட்டியில் வரும் 20ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் மீண்டும் வெளிநாட்டு வீரர்கள் திரும்புவார்களா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது டேவால்ட் பிரேவிஸ் சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவதை உறுதிப்படுத்தியதால், வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.