தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம்  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது இருவரிடமும் 9 கிலோ போதைபொருள் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்திய போது ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குருவி ரொட்டி என்பதும், மற்றொருவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்த அழகு என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரும் சேர்ந்து ஆந்திராவில் இருந்து போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். எனவே போலீசார் அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.