
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களாக இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வு பெற்றுவிடுவது, இந்திய அணியின் நிலையை சிதைக்கக்கூடியது என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “இன்றைய தலைமுறை வீரர்களில் அனுபவமிக்க வீரர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை இழப்பது மிகப்பெரிய பிழை ஆகும்” என்று அவர் கூறினார்.
கடந்த 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு, அனுபவமிக்க பல வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், சிலர் கட்டாயமாக ஓய்வு பெறச்செய்யப்பட்டதாகவும் யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டினார். “அந்த நேரத்தில் தோனி, வயதான வீரர்களை விரும்பவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தில் அனுபவசாலிகளை விட்டுவிட்டார். இதனால் தான் அந்த வெற்றி அணி சிதைந்து இன்று வரை அதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இந்தியா இருக்கிறது” என்று தெரிவித்து, மறைமுகமாக மகேந்திர சிங் தோனியை கடுமையாக விமர்சித்தார்.
“விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இன்னும் பல சாதனைகள் செய்பவர்களாகவே இருக்க முடியும். அவர்களுக்கு ஓய்வு பெறும் காலம் இது அல்ல. இந்திய அணிக்கு ஒரு வழிகாட்டியாக, இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் நெடுங்காலத் துணையாக இருக்க வேண்டும். ரோஹித்துக்கு தினமும் காலை 5 மணிக்கு ஓட வைக்கும் ஒரு சீரிய பயிற்சியாளர் இருந்தால், அவர் இன்னும் 5 வருடங்கள் விளையாட முடியும். தற்போது சீனியர்களாக அறிவுரை கூறும் வீரர்கள் அணியில் இல்லாததால் தான் இளம் வீரர்களை வைத்து கட்டிய கட்டமைப்பு சரியாக வளரவில்லை,” என்று யோக்ராஜ் சிங் தனது கருத்தை வலியுறுத்தினார்.
இந்தக் கருத்துகள், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலத்தை பற்றியும், இந்திய அணியின் நிலைத்தன்மையைப் பற்றியும் புதிதாக விவாதங்களை உருவாக்கி உள்ளன.