உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாக்பத்தின் கெக்ரா கோட்வாலி பகுதியில் உள்ள ரடௌல் நகரில், நள்ளிரவில் பிரெஸ்ஸா கார் ஒன்றில் வந்த சில திருடர்கள் திரைப்பட பாணியில் தாக்குதல் நடத்தினர். அவர்கள், வீட்டின் கதவை உடைத்து நுழைந்து, ஐந்து  ஆடுகளை காரில் ஏற்றி கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி வீடியோக்களில், திருடர்கள் திட்டமிட்ட முறையில் காரை வீடு அருகே நிறுத்தி, கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ஆடுகளை இழுத்து சென்று காரில் ஏற்றுகிறார்கள். இவை அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று  கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, பலர் சமூக ஊடகங்களில் “திருடர்கள் ஆன்லைன் ஷாப்பிங் பாணியை பின்பற்றுகிறார்கள்” என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

 

 

வீடியோ வைரலானதும், பாக்பத் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோட்வாலி பாக்பத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்தேக நபர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடித்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.