நடப்பது என்பது நாம் நாள்தோறும் செய்வது போல தெரிந்தாலும், அதற்கும் ஒரு சரியான முறையும், தவறான முறையும் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஜப்பான் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் “இன்டர்வல் வாக்கிங்” எனப்படும் நடை முறையில் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல நன்மைகளை பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் 3 முதல் 5 நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர், மீதமுள்ள 3 நிமிடங்கள் வேகமாக, உதாரணமாக ஒரு முக்கிய சந்திப்புக்கு தாமதமாக போகுவதாக நினைத்து தீவிரமாக நடக்க வேண்டும். இப்படியாக மாறி மாறி நடக்கும் நடை தான் “Interval Walking”. இதனை தினமும் 30 நிமிடங்கள் செய்யும் போது, அதிரடியான உடல்நல மாற்றங்களை காண முடியும் என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.

இந்த நடை முறையை தினமும் செய்யும் போது, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறையும், மனநிலை நல்லதாக இருக்கும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் தூக்க தரம் மேம்படும். இதுமட்டுமல்லாமல் இதய நலமும் உறுதி செய்யப்படும். டாக்டர் சௌரப் சேத்தி என்பவர் கூறுகையில், இந்த நடைமுறை 10,000 அடிகள் நடப்பதைவிட அதிக நன்மை தரக்கூடியது என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி செல்லும் போது, தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். சம நிலை பாதையில் மட்டும் அல்லாமல், சிறு உயரமான பாதையிலும் நடக்கலாம். உடல்நிலை மற்றும் உணவு பழக்கங்களை மேம்படுத்தி இந்த நடை முறையை மேற்கொண்டால், அதிக பருமனை குறைக்கும் பலன்களும் தெரியும்.