
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), அருண்குமார், அருளானந்தம் (34), பாபு (27), ஹெரன்பால் (29), மணிவண்ணன் (28), வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரி ராஜன் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் 9 பெரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தி 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. தங்களுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என கூறியுள்ளார்.