
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களையும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 15-ஆம் தேதி வரை விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தாக்குதல் நிறுத்தப்பட்டதால் 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க உள்ளனர். இதே போல 25 வான் பாதைகளையும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.