அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சீனாவின் மீதான வரிகளை அதிகப்படுத்தினார். இதனால் அமெரிக்கா சீனா இடையே வரிப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பேச்சு வார்த்தை மூலம் புதிய ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது அமெரிக்கா சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 245% வரி விதித்த நிலையில், சீனாவும் அமெரிக்காவிற்கு 125 % வரியை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஸ்விட்சர்லாந்தில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் கருவூலச் செயலாளரான ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதியான ஜேமிசன் ஆகியோர் சீனாவின் துணை பிரதமர் ஹீ லைஃபெங் உடன் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர்.

இந்த முடிவுகள் அதிபர் ட்ரம்ப்பிடம் விளக்கத்துடன் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்த விவரங்கள் திங்கள்கிழமை வெளியாகும் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக இணையதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் பேச்சுவார்த்தை மூலம் “சீனாவும், அமெரிக்காவும் பயனடைவதாகவும், அமெரிக்காவின் பொருள்களுக்கு சீனாவின் சந்தை திறந்திருப்பதையும் நாங்கள் விரும்புகிறோம், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிகாரிகள் சிலர் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.