நியூ மெக்ஸிகோ மாநிலம் பெர்னலிலோ கவுண்டியில், இரண்டு சிறுவர்கள்  துப்பாக்கியுடன் நடமாடும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காணொளி, பிப்ரவரி மாதம் பெர்னலிலோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சார்பில் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடியோவில், 7 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் துப்பாக்கியை கைகளில் எடுத்து, முன்னும் பின்னுமாக சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், துப்பாக்கியில் தோட்டாக்கள்  இருந்தது என்றும், சிறுவர்கள் அதை தங்கள் முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையை நேரடியாக கண்காணித்த அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக, குழந்தைகள் அந்த துப்பாக்கியை எங்கே, எப்படிப் பெற்றார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

 

“நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு வளர்ச்சி” போன்ற அம்சங்களை வலியுறுத்தும் வகையில், இந்த வீடியோவை வெளியிட்டதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், “BCSO ட்ரோன் தொழில்நுட்பம் அந்தப் பகுதியை பாதுகாக்க அதிகாரிகளை விரைவாக இயக்கச் செய்தது. இதன் மூலம், ஒரு பாதுகாப்பற்ற மோதலைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இது அமைந்தது” என அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பும் வகையிலும், துப்பாக்கி பராமரிப்பின் தேவையான கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.