
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததோடு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களின் ராணுவ தளங்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அதன் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இருவரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறினார்.
அதாவது அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனிருடன் பேசிவிட்டு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். அப்போது இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்கள் அதாவது ராணுவ செயல்பாடுகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வேறு யாரும் அதாவது மூன்றாவது தரப்பினர் யாரும் தலையிட வேண்டாம் எனவும் இந்தியா அவர்களிடம் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் ஒரு மணி அளவில் பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்திய டிஜிஎம்ஓ-வை தொடர்பு கொண்டு நேரம் கேட்டுள்ளார். அப்போது இந்தியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் குறித்து அவர்களிடம் கூறப்பட்ட நிலையில் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. மேலும் விமானத்தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் இருந்து நேரம் அழைப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது.