
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதனால் பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா அதனை வெற்றிகரமாக முறியடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. இதற்கிடையில் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை ஆப்ரேஷன் சிந்துருக்கு இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்லக்கூடாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, பிரதமர் மோடி தான் இரண்டு நாட்களாக தூங்காமல் கண்விழித்து ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்தார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். ஆனால் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக திமுக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.
ராணுவ வீரர்கள் என்ன எல்லைக்கு போய் சண்டையா போட்டாங்க. போருக்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை வாங்கி கொடுத்தது மத்திய அரசாங்கம் தான். பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி தான் வாங்கி கொடுத்தார். மேலும் திமுகவினர் பிரதமர் மோடியை தான் பாராட்ட வேண்டும். தற்போது அவர்கள் நடத்தும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.