டெல்லியில் மூன்று வயது சிறுமிக்கு வேர்கடலை  மூச்சுக்குழாயில் சிக்கியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார். சிறுமி 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், வாந்தி மற்றும் மோசமான இருமலால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக மூச்சுத்திணறல் அதிகரித்து, ஷாலிமார் பாகில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்தவர்கள் சிகிச்சை மேற்கொள்ளும் போது, வலது பக்க நுரையீரலுக்கு சுவாசம் குறைவாக செல்வதைக் கண்டுபிடித்தனர். எக்ஸ்ரே எடுத்தபோது, வேர்க்கடலை நுரையீரலுக்குச் செல்லும் பிரதான குழாயில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக சிறுவர் நுரையீரல் நிபுணர் டாக்டர் தீபக் குமார் தலைமையிலான குழு, பிராங் (Bronchoscopy) எனும் செயல்முறையில் வேர்க்கடலையை அகற்றினர். அந்த  வேர்க்கடலை சுமார் 10 நாட்களாக உள்ளே சிக்கி இருந்ததால், அது அழற்ஜியை ஏற்படுத்தி, உடலே அதனை சுற்றி granulation tissue உருவாக்கியிருந்தது. அகற்றும் பணியின் போது வேர்க்கடலை இரண்டு துண்டுகளாக உடைந்தது. குழந்தைக்கு சுவாச அழற்சி குறைய இன்ஹேலர் ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டு, ICU-வில் நன்கு கண்காணிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் குழந்தை விரைவில் மீண்டு, நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டாக்டர் சோனியா மித்தல் கூறுகையில், “மூன்று வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு வேர்க்கடலை போன்ற கடின உணவுகள் கொடுக்கக் கூடாது. அவர்களின் விழுங்கும் திறன் இன்னும் முழுமையடையாத நிலையிலுள்ளதால், இது போன்ற சம்பவங்கள் ஏற்படலாம். உணவுகளை நன்றாக அரைத்து அல்லது நசுக்கி கொடுப்பதே சிறந்தது,” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது நோய் அல்ல; தவறான நேரத்தில் நிகழும் விபத்து என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.