
நியூயார்க்கை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட், வெற்றிகரமான வாழ்க்கைக்கும், பங்குச் சந்தை முதலீட்டுக்கும் வழிகாட்டும் சில “தங்க விதிகள்” வழங்கியுள்ளார். பங்குச் சந்தையில் புதியதாக கால் வைக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக இந்த துறையில் இருப்பவர்களுக்கும் இந்த விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.
1. சிறந்த முதலீடு – உங்களுக்குள்!
“Best investment is in yourself” என்ற வார்த்தையை வாரன் பஃபெட் எப்போதும் வலியுறுத்துகிறார். பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அறிவு என்பது வளரக்கூடியது. தினமும் சிறிது நேரம் படித்து, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை முழுவதும் பயனளிக்கும் ஒரு முதலீடு ஆகும்.
2. புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டாம்
“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியவில்லை என்றால், அதுவே உண்மையான ஆபத்து” என பஃபெட் கூறுகிறார். மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு முதலீடு செய்வது தவறு. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம், துறை, சந்தை நிலை ஆகியவை பற்றி நீங்களே சொந்தமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். தெளிவான புரிதல் இருந்தால்தான், முதலீட்டில் நம்பிக்கையும் வெற்றியும் கிடைக்கும்.
3. நல்ல நிறுவனத்தை நியாயமான விலையில் வாங்குங்கள்
“மோசமான நிறுவனங்களை மலிவாக வாங்குவதைவிட, நல்ல நிறுவனங்களை நியாயமான விலையில் வாங்குவது நல்லது” என்பது பஃபெட்டின் வழிமுறை. ஒருங்கிணைந்த மேலாண்மை, நம்பிக்கைக்குரிய வரலாறு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்தால், அது நீண்ட காலத்துக்கு நன்மை தரும். மதிப்பு குறைந்த வேளைகளில் அவை முதலீடுக்கு சிறந்ததாய் அமையும்.
4. பொறுமை மிக முக்கியம் – ஹோல்டிங் காலம் என்றென்றும்!
“எனக்குப் பிடித்தது ஹோல்டிங் காலம் ” என்று பஃபெட் கூறுகிறார். சந்தையில் எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆனால், ஒரு நல்ல நிறுவனத்தில் நீண்ட காலம் முதலீடு செய்து வைத்திருப்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். இந்த பொறுமையை கடைபிடிக்காமல் இருப்பதே பலர் வெற்றியடையாமல் செல்வதற்கு முக்கிய காரணியாகும்.
5. எல்லா வாய்ப்புகளிலும் முதலீடு செய்ய வேண்டாம்
“மிகவும் வெற்றிகரமானவர்கள், வேண்டாம் என்று சொல்வதில் நிபுணர்கள்” என்று அவர் கூறுகிறார். சந்தையில் பல வாய்ப்புகள் வரும், ஆனால் அவை அனைத்திலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட மற்றும் நம்பிக்கை உள்ள துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். குறைவான வாய்ப்புகளில், தீவிரமாக கவனம் செலுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் உள்ளது.
வாரன் பஃபெட்டின் இந்த விதிகள், தனிநபர் வாழ்க்கையிலோ, பங்குச் சந்தை முதலீட்டிலோ, நீண்ட கால முன்னேற்றத்திற்கும் சீரான வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகின்றன. இவை வெறும் நிதி நுட்பங்கள் அல்ல; வாழ்க்கையின் மீதான தெளிவான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும்.