தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதாவது திருநெல்வேலி தொகுதியில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் நெல்லை தொகுதியிலே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு அடுத்து வரும் தேர்தலில் ஒதுக்காவிடில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக தொண்டர்களை இழக்க கூடும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது நிர்வாகிகள் கடிதம் எழுதி எச்சரிக்கும் விதமாக அனுப்பியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். மேலும் இனிவரும் காலத்தில் நெல்லையில் அதிமுக வேட்பாளர்களை நியமிக்காவிடில் நெல்லையில் அதிமுக இல்லை என்ற சூழல் உருவாகும் என கடிதம் பறந்துள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.