இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானத்தைச் செலுத்தும் முதல் பெண் வீரராக உலகம் அறிந்த ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டார் என்ற பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தியை மத்திய அரசின் Press Information Bureau (PIB) தனது அதிகாரப்பூர்வ பக்கம் மூலம் முற்றிலும் பொய்யானது என தெரிவித்து, உறுதிப்படுத்தியுள்ளது.

“இந்திய விமானப்படை வீராங்கனை சிவாங்கி சிங் பாகிஸ்தானில் கைதானதாக பரவும் தகவல் முற்றிலும் தவறு. இது இந்தியாவிற்கு எதிரான புரட்சி பரப்பும் முயற்சி,” என பி.ஐ.பி. தனது போஸ்ட் ஒன்றில் வலியுறுத்தியுள்ளது. சில பாகிஸ்தான் சார்ந்த கணக்குகள், சியல் கோட் அருகே அவரது போர் விமானம் விழுந்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பரப்பிய செய்தி உண்மையல்ல. மேலும், ஒரு சம்பந்தமற்ற வீடியோவும் இந்தக் கதையின் பின்னணியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரணாசியை சேர்ந்த சிவாங்கி சிங், 2017ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். முதலில் MiG-21 Bison விமானம் இயக்கிய அவர், பின்னர் ரஃபேல் போர் விமான அணியில் சேர்ந்தார். பிரான்சில் நடைபெற்ற ஓரியன் பயிற்சி உட்பட பல்வேறு சர்வதேச இராணுவப் பயிற்சிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவரைப் பற்றிய பிடிபட்டார் என்ற வதந்தி, இந்திய விமானப்படையின் மரியாதைக்கும் மக்கள் நம்பிக்கைக்கும் கேடு விளைவிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பெரிதும் பரவுகின்றன. மக்களுக்கு பி.ஐ.பி வேண்டுகோள் விடுத்திருப்பது – எந்த ஒரு செய்தியையும் பகிர்வதற்கு முன் சரிபார்த்து கொள்ளுங்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.