பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைப்பெற்றது. இதில் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷாந்த் குஷ்வாஹா என்ற மணமகன் தனது திருமண நாளில் கூட தேசிய பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்றது, நாடுமுழுவதும் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு, மாலை 6 மணிக்கு திருமண ஊர்வலமாக புறப்பட திட்டமிட்டிருந்த சுஷாந்த், அதற்கும் முன் தனது பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் கலந்து கொள்ளத் தீர்மானித்தார்.

இதனால் அவரது மணப்பெண், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து சிஷாந்த் கூறும் போது, இன்று எனக்கு திருமணம். ஆனால் அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் அல்ல. இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்த ஒத்திகையில் நான் ஒரு சிறிய அங்கமாக இருப்பது பெருமையான தருணம். தேசம்தான் முதலில். ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தங்கள் திருமணம் நடக்கும் இடத்தை விட்டு எல்லைகளில் சண்டையிட செல்வார்கள். சூழ்நிலை தேவைப்பட்டால் நாமும் அதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.