சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார்.

அப்போதும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கணவர் தூக்கிட்ட நிலையிலும், மனைவி வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று கணவன் மனைவி இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் இறந்தவர்கள் இருவரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரித்திக் காயல்(23), தஷ்மிரா காதுன்(23) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது.

இந்த நிலையில் இளந்தம்பதியினரான இருவரும் வாரத்திற்கு ஒரு முறை இதே தனியார் விடுதியில் தங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறை விடுதிக்கு வருவதற்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தினால் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

எனவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதற்கு குழந்தையின்மை தான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.