மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆசிரியர்கள் போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் அரசு வேலை பெற்றிருப்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த விசாரணையின் போது, அவர்களுடைய கல்வி ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், இரண்டு இரட்டை சகோதரிகள் ஒரே பெயர் மற்றும் ஒரே சான்றிதழைப் பயன்படுத்தி வெவ்வேறு பள்ளிகளில் 18 ஆண்டுகளாக பணியாற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, தற்போது 3 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 16 பேரும் இன்னும் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருவதை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், விகிதாசார ரீதியில் சம்பளம் பெற்ற இரண்டு சகோதரிகளும் தலா 18 ஆண்டுகளில் தலா ரூ.80 லட்சம் என மொத்தம் ரூ.1.60 கோடி சம்பளம் பெற்றிருப்பது தகவலில் தெரியவந்துள்ளது. இதில் அந்த இரட்டையர்களில்  ஒருவர் தலைமறைவாக உள்ளார், மற்றொருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகார்கள் முதலில் போபால் பொது கல்வி இயக்குநரகம், ஜபல்பூர் இணை இயக்குநர் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் தலையிட்டு ஏப்ரல் 9 தேதிக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இருப்பினும், நடவடிக்கை மெதுவாகவே நடந்து வருவதாகவும், மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட இரட்டை சகோதரிகளில் ஒருவர் அதனை ஏற்க மறுத்து தலைமறைவாகியுள்ளார். மேலும் துறை அதிகாரிகள் அவரது வீட்டின் வாசலில் நோட்டீஸை ஒட்டியுள்ளனர். தற்போது, இவர்களால் நடைபெற்றுள்ள மோசடி அரசு நிதியை பெரிதும் பாதித்துள்ளது. இசசம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.