ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் இன்று காலை ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்திய ராணுவத்தின் டிரக் ஒன்று, தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பயணம் செய்யும் போதே பேட்டரி சாஷ்மா அருகே கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்ததுடன், ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த வீரர்கள்  அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர்  என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள ராம்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால், டிரக் முற்றிலும் சிதைந்துவிட்டது. இது ராணுவத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராம்பன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.