ஒரு தொழில்நுட்ப வேலை அழைப்பில், ஒரு ஊழியர் தவறுதலாக வாடிக்கையாளரிடம் “லவ் யூ” என்று கூறியதோடு, வெட்கத்தில் உடனடியாக போனை வைத்துவிட்டார். இந்த சம்பவத்தை அவர் சமூக ஊடகமான Reddit-இல் பகிர்ந்ததோடு, அது விரைவாக வைரலாகியுள்ளது. வழக்கமாக “Thank you” அல்லது “Talk soon” என்று அழைப்பு முடிக்கும் பொழுது, தவறுதலாக வந்த “Love you” என்ற வார்த்தைக்கு எதிரே இருந்த வாடிக்கையாளர் சிரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடல் பின்னணியில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த ஊழியருக்கு, அடுத்த நாள் வந்த மின்னஞ்சல் அவர் எதிர்பார்க்காத ஒரு உருக்கமான தருணமாக அமைந்தது. அந்த வாடிக்கையாளர் அனுப்பிய மின்னஞ்சலில், “நீங்கள் ‘லவ் யூ’ என்று கூறியதற்கு நான் சிரித்ததை தவறாக நினைக்க வேண்டாம். நானும் இதை செய்திருக்கிறேன்.

இது சகஜமாக ஏற்படும் ஒன்று,” எனத் தெரிவிக்கிறார். மேலும், “உங்களுக்குள் அத்தனை அன்பும் பாசமும் இயல்பாக இருக்கிறது என்பது பெருமைக்குரியது. அதை மறைக்க வேண்டியதில்லை, போற்றவேண்டியது” என கூறியிருந்தார். அந்த மின்னஞ்சலின் முடிவில், அடுத்த சந்திப்புக்கான விவரங்களும் சேர்த்திருந்தார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதோடு, பலரும் தங்களுக்குள்ள அனுபவங்களையும் பதிவு செய்துள்ளனர். ஒருவர், “வீட்டிலிருந்து வேலை செய்யும் போது மனைவி, பிள்ளைகள் இடையே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், பாச வார்த்தைகள் பிழையாக வேலை அழைப்பிலும் வந்து விடுகின்றன,” என எழுதினார். மற்றொருவர், “நான் என் ஆசிரியரிடம் ‘அம்மா’ என்று அழைத்த அனுபவம் உள்ளது” என சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.